பிரச்சினைகளை தீர்ப்பது எப்படி?
பகுதி 4
“ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு காட்டுங்கள்; ஏனென்றால், அன்பு திரளான பாவங்களை மூடும்.”
கல்யாணமான கொஞ்ச நாட்களிலேயே பிரச்சினைக்கு மேல் பிரச்சினை வரலாம்.
நீங்கள் இருவரும் வித்தியாசமாக யோசிப்பதும் செயல்படுவதும் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
சில சமயம், நண்பர்களிடமிருந்தும் உறவினரிடமிருந்தும் பிரச்சினைகள் வரலாம்.
எதிர்பாராத சம்பவங்களும் பிரச்சினைகளுக்குக் காரணமாகலாம்.
உங்கள் திருமண வாழ்க்கையைப் பல கனவுகளோடு ஆரம்பித்திருப்பீர்கள்.
அதனால், பிரச்சினைகள் வரும்போது சோர்ந்துவிடாதீர்கள்.
அவற்றைச் சரிசெய்ய முயற்சி செய்தால் எந்தப் பிரச்சினையையும் உங்களால் நிச்சயம் சமாளிக்க முடியும்.
1 கலந்து பேசுங்கள்
‘பேசுவதற்கு ஒரு காலமுண்டு.’
பிரச்சினைகளைப் பற்றி பேச நேரம் ஒதுக்குங்கள்.
அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், எப்படி உணருகிறீர்கள் என்பதை உங்கள் கணவரிடமோ மனைவியிடமோ வெளிப்படையாகச் சொல்லுங்கள்.
எப்போதும் ‘உண்மையே பேசுங்கள்.’
கோபம் தலைக்கேறினாலும் சண்டை போடாதீர்கள், அமைதியாகப் பேசுங்கள்.
அப்போது, எந்தவொரு பிரச்சினையும் பூகம்பமாக வெடிக்காது.
கணவரின் (அல்லது மனைவியின்) கருத்தை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் அவரிடம் கனிவாக நடந்துகொள்ளுங்கள்.
அவருக்கு அன்பும் மரியாதையும் காட்டுங்கள்.
பிரச்சினைகளை உடனுக்குடன் சரிசெய்யுங்கள். பேசாமல் இருந்துவிடாதீர்கள்.
நீங்கள் என்ன செய்யலாம்?
பிரச்சினைகளைப் பற்றி எந்தச் சமயத்தில் பேசினால் சரியாக இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்
உங்கள் கணவரோ மனைவியோ பேசும்போது குறுக்கிடாதீர்கள், கவனமாகக் கேளுங்கள். அதன் பிறகு நீங்கள் பேசுங்கள்.
2 காதுகொடுத்துக் கேளுங்கள், புரிந்துகொள்ளுங்கள்
‘ஒருவருக்கொருவர் கனிவான பாசத்தை காட்டுங்கள்; ஒருவருக்கொருவர் மதிப்புக் கொடுப்பதில் முந்திக்கொள்ளுங்கள்.’
கணவனோ மனைவியோ பேசும்போது காதுகொடுத்துக் கேட்பது ரொம்ப முக்கியம்.
அவர் சொல்ல வருவதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். அப்போது, ‘அனுதாபத்தோடும் . . . மனத்தாழ்மையோடும்’ நடந்துகொள்ளுங்கள்.
கவனித்துக் கேட்பதுபோல் காட்டிக்கொள்ளாதீர்கள்.
முடிந்தால் நீங்கள் செய்துகொண்டிருக்கும் வேலையை ஓரங்கட்டிவிட்டு அவர் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள்.
இல்லையென்றால் இதைப் பற்றி பிறகு பேசலாமா என்று அன்பாகக் கேளுங்கள்.
உங்கள் துணையை எதிரியாகப் பார்க்காமல் நண்பராகப் பார்த்தால் ‘சீக்கிரமாய்க் கோபமடைய’ மாட்டீர்கள்.
நீங்கள் என்ன செய்யலாம்?
கணவர் (அல்லது மனைவி) சொல்வது உங்களுக்கு எரிச்சலாக இருந்தாலும் பொறுமையாகக் கேளுங்கள். முழு விவரத்தையும் கேட்பதற்கு முன் எந்த முடிவிற்கும் வராதீர்கள்
அவர் சொல்வதை மட்டுமல்லாமல் அவருடைய மனதில் இருப்பதையும் புரிந்துகொள்ளுங்கள். உங்கள் துணையின் முகபாவனை, பேசும் தொனி, சைகை ஆகியவற்றைக் கவனியுங்கள்
3 சொன்னதைச் செய்யுங்கள்
“கடும் உழைப்பு எப்போதும் பயன் தரும்; வெறும் பேச்சினால் வருவது வறுமையே.”
ஒரு பிரச்சினையை எப்படித் தீர்க்கலாம் என்று நீங்கள் இருவரும் சேர்ந்து முடிவெடுத்தால் மட்டும் போதாது, அதன்படி செய்வதும் முக்கியம்.
இதற்குக் கடின முயற்சி தேவை.
நீங்கள் இருவரும் சேர்ந்து முயற்சி செய்தால் ‘நல்ல பலன்’ கிடைக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை!
நீங்கள் என்ன செய்யலாம்?
‘பிரச்சினையைத் தீர்க்க நான் என்ன செய்யலாம்’ என்று யோசித்து முடிவெடுங்கள்
முடிவெடுத்தபடி செய்கிறீர்களா என்று அடிக்கடி பார்த்துக்கொள்ளுங்கள்
இருவராகப் பிரச்சினைகளைச் சமாளியுங்கள்
திருமண வாழ்வில் தென்றல் வீசுவதும் புயல் அடிப்பதும் உங்கள் இருவர் கையில்தான் இருக்கிறது.
நடந்து முடிந்த கசப்பான விஷயங்களையே கிளறிக்கொண்டிருக்காமல் நடக்கப்போகிற விஷயங்களைப் பற்றி யோசியுங்கள்.
இருவரும் சேர்ந்து செயல்பட்டால். எந்தவொரு பிரச்சினையையும் உங்களால் வெற்றிகரமாகச் சமாளிக்க முடியும்!
உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்...
என் கணவரோடு (அல்லது மனைவியோடு) கலந்துபேச வேண்டிய மிக முக்கியமான பிரச்சினை எது?
ஒரு பிரச்சினையைப் பற்றி என் கணவர் (அல்லது மனைவி) எப்படி உணருகிறார் என்பதைப் புரிந்துகொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?